madurai aadheenam

பாகிஸ்தானும் சைனாவும் தீவிரவாதத்தின் முகம் – பஹல்காம் தாக்குதலுக்கு மதுரை ஆதீனம் ஆவேச கண்டனம்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில் மதுரை ஆதீனம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததும், 17 பேர் படுகாயமடைந்ததும் நாடெங்கிலும் பெரும் அதிர்வலை உருவாக்கியுள்ளது.

இந்தப் பயங்கரச் சம்பவம் குறித்து வீடியோவொன்றை வெளியிட்ட மதுரை ஆதீனம், தமது ஆவேசப்பூர்வமான பதிலில் கூறியதாவது:

“வன்மையாக கண்டிக்கத்தக்க சம்பவம் இது. ‘நீங்க யாரு’னு கேட்டுக்கேட்டே, சுற்றுலாப் பயணிகளை கொன்றிருக்காங்க. உலக நாடுகள் முழுவதும் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஐநா சபையிலிருந்து பாகிஸ்தானை உடனடியாக நீக்க வேண்டும். விளையாட்டு மட்டுமல்ல, எந்தவித உறவுகளும் பாகிஸ்தானுடன் இருக்கக்கூடாது.”

அதுமட்டுமின்றி, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள நடவடிக்கைகளை மதுரை ஆதீனம் பாராட்டினார்.

“இது 60 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் விவகாரம். நம் பிரதமர் வந்துதான் இதை முறையாக சரிசெய்து வருகிறார். ஆனால் இதற்கெல்லாம் மூலக்காரணம் சைனாக்காரன் தான். ஆயுதங்களை வழங்குவது சீனாவே. கம்யூனிஸ்ட் நாடான சீனா, யாரும் இருக்கக்கூடாது என படைகள் அனுப்புகிறது.”

அதீனம் மேலும் கூறியதாவது:

“சைனாவும் பாகிஸ்தானும் ஒரே மாதிரியான எதிரிகளைப் போலவே செயல்படுகின்றன. இந்த இரு நாடுகளின் செயல்களை உலக நாடுகள் கண்டித்து, முழுமையாக முறையிட வேண்டும்.”

இந்த தாக்குதலுக்கு எதிராக மதுரை ஆதீனத்தின் இந்த ஆவேசமான பதிலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.