temple.jpg

தமிழ்ப் புத்தாண்டையொட்டி மதுரை கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திங்கட்கிழமை சிறப்பு வழிபாடுகள் விழாவாக நடைபெற்றன. அதிகாலை நடை திறக்கப்பட்டதும், சுவாமி மற்றும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த புனித நாளில், சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப்பட்டை சாத்தி, மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம் மற்றும் தங்கப் பாவாடை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனையும் நடத்தப்பட்டது. கோயில் இணை ஆணையர் ச. கிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

புத்தாண்டு தரிசனத்துக்காக, அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகமான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கோயில் ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பக்தர்களை ஒழுங்குபடுத்தினர்.

மதுரை மாநகரத்திலுள்ள மற்ற முக்கிய கோயில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. திருவாப்புடையார் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரர் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், நரசிங்கம் நரசிங்கப் பெருமாள் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், மற்றும் இம்மையிலும் நன்மை தருவார் கோயில் ஆகிய கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.