மதுரை, சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சி மேற்கொள்ளும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார்,
“மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் மாநகராட்சிக்கு ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை உள்ளதாகவும், அந்த தொகை செலுத்தப்படவில்லை என்றால் திருவிழா ஏற்பாடுகளை செய்ய முடியாது என்று மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். இது பற்றிய தகவல் அமைச்சருக்கு உள்ளதா?”
என்று கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
“சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி மற்றும் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்க மாநகராட்சி ஆணையருக்கு தக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பணம் ஒரு தடையல்ல. விழா முழுமையாக மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய குறிப்புகள்:
- திருவிழா ஏற்பாடுகளுக்கான நிதி பற்றிய குழப்பம் எழுந்த நிலையில், அரசின் உறுதி.
- அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து நகராட்சி நிர்வாகத்திற்கு வழிகாட்டு நடவடிக்கைகள்.
- மக்கள் நலனையே முன்னிட்டு விழா நிர்வாகம் நடத்தப்படும் எனத் தகவல்.