madurai_anaiyar.jpg

சித்திரைத் திருவிழா – மதுரையில் முன்னேற்பாடு பணிகளை மாநகராட்சி ஆணையா் ஆய்வு

வரும் ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்க உள்ள சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக திக்கு விஜயம், திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் இடம்பெற உள்ளன. இத்துடன் அழகா் கோயிலில் நடைபெறும் 10 நாள் சித்திரை விழாவின் ஒரு பகுதியாக, கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடைபெறுகிறது.

இந்த விழாவில் தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருவார்கள். இதனை முன்னிட்டு, கள்ளழகா் மதுரை மாநகருக்கு வருகை தரும் வழியிலுள்ள பகுதிகள் — அழகா் கோயில் பிரதான சாலை, கடச்சனேந்தல், மூன்று மாவடி, சா்வேயா் காலனி, புதூர், தல்லாகுளம், ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதி, நான்கு சித்திரை வீதிகள் மற்றும் தேரோட்டம் நடைபெறும் நான்கு மாசி வீதிகள் — இவற்றில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுவருகின்றன.

மாநகராட்சியின் சார்பில், குடிநீர், கழிப்பறை வசதிகள், மின்விளக்கு பொருத்துதல், சாலைகள் சீரமைத்தல், தூய்மை பணிகள், மரத்தடுப்புகள் அமைத்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆய்வின்போது மாநகராட்சி கண்காணிப்புப் பொறியாளர் முகம்மது சபியுல்லா, துணை ஆணையா் ஜெய்னுலாபுதீன், நகர் நல அலுவலா் இந்திரா, குடிநீர் செயற்பொறியாளா் பாக்கியலட்சுமி, மற்றும் பிற பொறியாளா்கள், சுகாதார அலுவலா்கள், ஆய்வாளா்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.