police_force.jpg

மதுரை மீனாட்சி கோயிலில் கடும் பாதுகாப்பு – காஷ்மீர் தாக்குதலின் பின்னணி

ஜம்மு-காஷ்மீரில் பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலியாக, மதுரை நகரில் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தரும் மீனாட்சி கோயிலில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமான சோதனைகளை விட தீவிரமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோயிலுக்குள் மற்றும் சுற்றுப்புறங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ரயில்நிலையம், பேருந்து நிலையங்கள் (மாட்டுத்தாவணி, எம்.ஜி.ஆர்., பெரியார், ஆரப்பாளையம்) உள்ளிட்ட இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகத்துக்குரிய நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் சந்தேகத்துக்குரிய பொருட்கள் அல்லது நபர்களைப் பார்த்தால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள தங்கும் விடுதிகளிலும், சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்கினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.