mullai periyar dam.jpg

மதுரையின் குடிநீர் தேவைக்கு தீர்வாக முல்லைப் பெரியாறு திட்டம் – விரைவில் செயல்படுத்த வேண்டும் என மாமன்றத்தில் வலியுறுத்தல்

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், ரூ.1,600 கோடி மதிப்பில் நடைப்பெற்று வரும் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

இக்கூட்டத்திற்கு மேயர் வ.இந்திராணி தலைமை வகிக்க, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், துணைமேயர் தி.நாகராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மேயர் வ.இந்திராணி பேசும்போது, வரவிருக்கும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நகரின் முக்கிய பகுதிகளில் தூய்மை, குடிநீர், கழிப்பறை வசதிகள், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக ஒளியுடன் விளக்குகள் பொருத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சோலை எம். ராஜா கூறியதாவது:
மதுரை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு இன்னும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. எனவே, அனைத்து பகுதிகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்ட பின்பே திட்டத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், மழைநீர் வடிகால்கள் பராமரிப்பு இல்லாததால் மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். முக்கிய மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டியதற்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நிதியை ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டியதற்கும் கோரிக்கை வைத்தார்.

மற்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள்:

  • தெரு மின் விளக்குகள்
  • சாலை சீரமைப்புகள்
  • குடிநீர் இணைப்புகள்
  • புதை சாக்கடை சீரமைப்புப் பணிகள்
  • நாய்கள், மாடுகளைப் பிடிக்க கூடுதல் வாகனங்கள்
  • திட்டப் பணிகளுக்கான கூடுதல் நிதியொதுக்கீடு

இந்தக் கோரிக்கைகளுக்கு மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் பதிலளித்தனர். கூட்டத்தில் பல்வேறு மாமன்ற உறுப்பினர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.