மதுரை அருகே கீழடியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வில் தமிழர்களின் பண்பாட்டுத் தொன்மையை வெளிக்கொணரும் முக்கியமான ஆதாரங்கள் வெளியாகின. இந்த ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை மத்திய தொல்லியல்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை ஒன்றிய தொல்லியல்துறை ஏற்காமல் திருப்பி அனுப்பியுள்ளது.
இதை எதிர்த்து திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அணுகுமுறை, தமிழர்களின் தொன்மையும் பெருமையும் அங்கீகரிக்க அவர்களுக்கு மனம் இல்லை என்பதை காட்டுகிறது என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். “இந்தியாவின் பழங்கால வரலாற்றை உணர்த்தும் இந்த அறிக்கையை ஏற்காதது, அரசியல் நோக்கத்துடன் நிறைந்தது,” என்றும் அவர் கூறினார்.
மதுரை மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன், “தமிழர் வரலாற்றுக்கும் கீழடி உண்மைக்கும் எதிரியாக பாஜக செயல்படுகிறது,” எனக் குற்றம்சாட்டினார்.
இதை மறுத்து பதிலளித்த பாஜக தமிழிசை சௌந்தர்ராஜன், “கீழடியில் அகழ்வாய்விற்கு நிதி ஒதுக்கியதும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று பார்வையிட்டதும் மத்திய அரசே. சு.வெங்கடேசன் இதனை அரசியல் கருவியாக பயன்படுத்தக்கூடாது,” என தெரிவித்தார்.
இந்த விவகாரம், தமிழர் பண்பாட்டு அடையாளங்களை ஏற்றுக்கொள்ளும் தயார்பாட்டில் மத்திய அரசு எவ்வளவு உண்மையாக இருக்கிறது என்பதைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.